தேசத்தின் காவலர்கள், காக்கும் தெய்வங்கள் என சிலாகித்து சொல்லப்படும் நம் ஜாவன்கன்.. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத
ஒரு அரக்கத்தனத்திற்க்கும், கொடூரத்திற்கும் ஜவாப்தாரியாயிருக்கிறார்கள்.
போர் என்ற பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுந்தான் ராணுவ வீரர்கள் உபயோகப்படுத்தப் படுகிறார்கள்.
அவர்களின் வக்கிரமும், மிருகத்தனமும் வெளியில் அதிகம் தெரியபடுத்தப்படுவதில்லை. அத்தனை திரைமறைவுகள் உள்ள துறையிது.
அதையும் மீறி அவர்களின் இன்னோரு முகம் தெளிவாயிருக்கிறது மக்களுக்கு. ஒரு ராணுவ வீரன்(?) ஒருவனின் குரூர முகம்.
கசாப் - போன்ற கசாப்புக்காரனையெல்லாம் -பிரியாணி- உணவுடன் உபசரிக்கிற இந்த கையாலகாத தேசத்தின் பாதுகாவலர்கள், எத்தனையோ
தீவிரவாதிகளை "மயிரிழையில்" தப்பவிட்ட அசகாய சூரர்கள் ஒரு சிறுவனை, ஒரு பிஞ்சை நெற்றிப்பொட்டை குறிபார்த்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் .
என்ன காரணம்?
அச்சிறுவன் தில்சன் தேச எல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிக் கொண்டிருந்தானா?
அல்லது,
சூயிங்கம் மென்றபடி கண்ணில்படுகின்ற மனித உயிர்களை தன் துப்பாக்கியின் ரவைகளுக்கு இரையாக்கிக் கொண்டிருந்தானா?
ஜன சந்தடி நிறைந்த இடங்களில் மனித மனிதவெடிகுண்டாய் மாறி உயிர்களையும், அமைதியையும் காவு வாங்க முயன்றானா?.
இப்படியெல்லாம் நடந்திருந்தால் கூட இந்த இந்தியதேசத்தில் சர்வ சுதந்திரத்தோடும், சகல வசதிகளோடும் வாழ விட்டிருப்பார்கள்.
பாவம் குழந்தை தில்சனுக்கு இது தெரியவில்லை.
ராணுவ குடியிருப்பு வளாகத்தில் மரமேறி பாதாம் கொட்டை பறித்திருக்கிறான். (அய்யோ! எவ்வளவு பெரியக் குற்றம்! நம் தேசத்தின் பாதுகாப்பும், இறையான்மையும் என்னாவாவது?)
உலகளவில் யுத்ததர்மம், நாட்டின் பாதுகாப்பு என்கிற பெயரில் ராணுவம் நிகத்துகிற கொடூரங்கள்; அதன்பால் சிதைவுறுகிற விஷயங்கள் கணக்கில்லாதவை. அதற்காக மனித இனம் கிஞ்சித்தும்
வருந்தாமல் தேசபக்தி என்கிற வார்த்தையை பூசி.. ஓர் உயிரின்பாலும், மனிதநேயத்தின்பாலும் இருக்கிற சுரணையை மழுங்கடித்து, மொன்னையாகி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது.
சென்னையில் நடந்த இச்சம்பவம் மட்டும் இவர்களின் மிருகத்தனத்திற்கு உதாரணம் அல்ல.. இவர்கள் அடுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை விட அதிகம்.
ரயில் வண்டியில் முறையாக பயணச்சீட்டு எடுத்து பயணிக்கும் ஒரு குடிமகனை இருக்கையை விட்டு எழச்சொல்ல.. அவர் முடியாதென மறுக்க.. ஓடும் வண்டியிலிருந்து
அவரை தூக்கியெறிந்து கொன்றதும்..
பயணம் செய்கின்ற பெண்களிடம் பாலியல் மீறலில் ஈடுபடுவதும் வன்புணர்ச்சி கொள்வதும்.. ஏதோ, பல்துலக்குவது போல, தலைதுவட்டுவது போல சாதரண நிகழ்வுதான் இவர்களுக்கு!
இப்படி ஒரு வரைமுறையில்லாமல் இவர்கள் கட்டவிழ்த்துவிட்ட காட்டுமிராண்டிகளாக வலம் வருவதற்கு காரணம் அரசாங்கம் இவர்களுக்கு கொடுத்துள்ள சட்டச்சலுகைகள் தான்.
மலைவாழ் மக்களை நக்சல்பாரிகள் என கைது செய்வதும்.. மலைவாழ் பெண்களை வன்புணர்ச்சி செய்வதும், அவர்களின் பிறப்புறுப்பில் துப்பாக்கியின் கட்டைகளை நுழைப்பதும் தான்
காலம் காலமாக இவர்கள் புரிந்துவரும் தீவிரவாத ஒழிப்புப் பணி.
பாதுகாப்பிற்கும்.. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் தான் ராணுவம். ஆனால் ஆடைதரித்த மிருகங்களாகவும், ஆயுதம் படைத்த அரக்கர்களாகவும்தான் இருக்கிறது இவர்களின்
செயல்பாடு. ஆந்திரா, ஒரிசா, இன்னும் பல இந்திய மாநிலங்களில் நக்சல்பாரி அழிப்பு, மாவோயிஸ்ட் ஒழிப்பு என்கிற பெயரில் அப்பாவி மலைவாழ் மக்களிடம் இவர்கள் நடத்தும் காட்டாட்டம் ஒரு உதாரணம்!
இப்படி காடுகளுக்குள்ளும், ரகசிய விசாரணை அறைகளுக்குள்ளும், ஊடக வெளிச்சமற்ற பகுதிகளிலும் நடக்கும் இவர்களின் உயிர்வேட்டையின் நீட்சி வெளிப்படையான குடியிருப்பு
பகுதியிலேயே நடந்தேறியுள்ளது.
இதில் இன்னுமோர் கொடூரம், ஒரு குற்றத்தினை ராணுவத்தினர் நிகழ்த்தும்போது தடயங்களை அழிப்பதற்கு காவல்துறையும், மக்களின் எழுச்சியை நீர்த்துப் போகச் செய்வதற்கும் அரசும் செய்யும்
விஷமஸ் சாகசங்கள்தான்.
மக்களின் வரிபணம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதிகம் பயன்படுத்தப்படும் துறைதான் பாதுகாப்புதுறை.
அம்மக்களுக்கு இப்பாதுகாவலர்கள் காட்டும் விசுவாசம் நெஞ்சை நோகச் செய்கிறது.
நாங்கள் கெஞ்சிக் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான்
ராணுவம் என்றால் கட்டுப்பாடு என்ற பெயரும் உண்டு. கருணை என்ற ஒன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள் இனிமேலாவது.
ஏனெனில், உங்கள் துப்பாக்கி நீள்வதற்கும், குண்டுகளை உமிழ்வதற்கும் எண்ணற்ற நெற்றிகளும், நெஞ்சுகளும் உள்ளன.
அப்பாவிச் சிறுவனின் நெற்றியும்..
அபலை மக்களின் நெஞ்சுமல்ல..
சகோதரன் தில்சனுக்கு இந்த அண்ணனின் நெஞ்சார்ந்த கண்ணீர் அஞ்சலி!..

