Saturday, 20 November 2010

எங்கட வெளிகளுக்கு எப்போ?



போருக்கு பின்னான ஈழத்தில், தமிழ் மக்களின் உண்மை நிலையென்ன?
மீள் குடியமர்த்தும் அலுவல், எந்தளவிற்கு நடைபெறுகிறது என்பதையறிய,
அண்மையில் சில வலைதளங்களுக்குச் செல்ல நேர்ந்தது.
மனது கனத்து போனது.


ஈழத்து பாப் பாடகி பாடியது நினைவுக்கு வந்தது.
"என் கம்யூட்டர் கூகுளில்
இணைக்கப்பட்டிருக்கிறது.
கூகுள், அரசாங்கத்துடன்
இணைக்கப்பட்டுள்ளது"
போருக்கு முந்தைய காலங்களில் புலிகளின் வலைதளங்களில் போர் குறித்த
நிலைபாடுகளும், இணையத்தில் நம் மொழியை எப்படி செப்பனிட்டு மேம்படுத்துவது என்பதுவரை தெளிவான கண்ணோட்டத்தில் பல கட்டுரைகள் காணக் கிடைக்கும்.
போருக்கு பின் புலிகள் இயக்கம் சிதைக்கப்பட்ட பிறகு, சர்வதேச தலைவர்களின்
உட்பூசல்கள், தொடர்ச்சியாக கே.பி யின் கைது போன்றவற்றால் புலிகள் தரப்பு தகவல்கள் முரணாக வெளிப்பட்டன.
புலிகள் தவிர்த்து, ஈழத்து அக்கறை கொண்ட பிறதளங்களில் தகவல்களுக்கும் கட்டுரைகளுக்கும் தமிழகத்திலிருந்து
எந்த வித அசைவும் இல்லை என்பதுதான் மிகவும் வேதனையான ஒன்று.
இதனிடையே ஓர் வலைதளத்தில் இருந்து எச்சரிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
"தேனீர் பூக்கள்" என்கிற பெயரில் கருணாவின் ஒன்றுவிட்ட சித்தப்பா பையன் ஒருவர் உண்மையைத் தாங்கி வரும் ஈழத்து
தகவல்களையும், சிந்தனைகளையும் ஊடறுத்து வேறு தகவல்களை பதிவிறக்கம்
செய்து இணைய படிப்பாளிகளையும், தமிழின அக்கறை கொண்டோரையும் குழப்புவதாக அறிவித்திருக்கிறது.
எங்கெங்கெல்லாம்.. எப்படியெல்லாம் ஈழ தமிழின மக்களுக்கு பங்கம் செய்ய சாத்தியபாடுகள் உள்ளதோ..
அத்தனை வகையிலும் நடந்தேறி வருகிறது.
சில மாதங்களுக்கு முன் திருப்பூர் மாவட்ட மதிமுக பிரமுகர் ஒருவர்
"திரு. பிரபாகரன் அவர்களின் மரணச் சான்றிதலை இந்திய அரசாங்கம் பெற்றுக் கொண்டதா?
எனத் தகவல் அறியும் சட்டத்தில் கேட்டதற்கு 'உங்கள் கேள்விக்கு உண்டான நடவடிக்கை நடந்தேறி வருகிறது.'"
என பதில் அரசாங்கத்திடமிருந்து வந்துள்ளது.
இப்படி அரசு சார்ந்த தகவல்களிலும், மக்களுக்கு பெரும்பான்மையான விகிதத்தில்
கிடைக்கக்கூடிய ஊடகங்களிலும் தெளிவற்ற, உண்மைக்கெதிரான தகவல்களே பரப்பப்படுகின்றன.
முள்வேலிக்குள்ளே உள்ள தமிழ் மக்களுக்கும்..
மீள் குடியமர்த்தப்பட்டதாக சொல்லப்பட்ட மக்களுக்கும் இலங்கை அரசும், ஆயிரம் கோடி நிதியளித்திருப்பதாக கூரும்
இந்திய அரசும் ஸ்திரமான மறுமலர்ச்சியை தர முடியுமா? என்பது ஐயப்பாட்டிற்கு உடைய ஒன்றாகவே இருக்கிறது.
நாம் நம்ப வேண்டியது ஒன்றே ஒன்று...
எந்தப் புரட்சியும் தோற்றுவிடப்போவதில்லை.
சிந்திய ரத்தம், முளைக்காமல் ஒரு நாளும் மட்கி விடப் போவதில்லை..
உலக வரைபடத்தில் தமிழுக்கென்று ஒரு தனி நாடு இடம்பெறும்.
அது தமிழீழம் என்று பெயர் பெறும்.