Sunday, 12 December 2010

வாசித்ததும்... யோசித்ததும்...

ஒரே சமயத்தில் இரண்டு மூன்று புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் கைவந்து வெகுநாளாயிற்று. ஒன்றில் ஒன்று என்று பிம்பங்கள் ஏறி குழம்புவது இல்லை. வசப்பட்டாயிற்று.
அண்மையில் சா. கந்தசாமியின் "சாயாவனம்" - சாரு நிவேதிதாவின் "வரம்பு மீறிய பிரதிகள்" - இதனுடன் சொல்லவவே கூச்சம் கொள்கிற பால குமாரனின் "கடல் குருவிகள்".

(பால குமாரனின் சில குறிப்புகளோடு இதிலிருந்து ஒதுக்கிவிடுகிறேன்.).
தன் மகள் பிராமணனல்லாத ஒருவனோடு காதல் கொள்கிறாள். காதல் கொள்ளப்படுகிற இளைஞனும் "காமோ..சோமோ"வென அலையும் தமிழ் சினிமாவின் நாயகப் பிரதிநிதியல்ல. வாழ்க்கையையும், பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தவன்.

உடனே நாயகியின் அப்பா.. அவனை அழைத்து "நீங்கள் வைசியர்.. வியாபாரம் பண்றவா.. நாங்களோ வேதம் பண்றவா.. ரெண்டும் வேற வேற. எங்க வித்து மணி சத்தத்த கேட்கும். உங்க வித்து பணப்பெட்டி சத்தத்த ரசிக்கும். ரெண்டும் சேந்தா கொழப்பமான வித்துதான் உருவாகும்.
வர்ணம், ஆயிரம் வர்ஷமா பெரியவா போஷிச்சுண்டு வர்றது. அது சத்தியம். உண்மை.. அதனால என் பொண்ணை விட்ரு..." என்று இரண்டு மூன்று பக்கம் சாதி மலத்தில் முங்கியெடுத்த எழுத்து.
புத்தகம் விலக்க கண்களை மூடுவது போய், பாலகுமாரனின் எழுத்தையெல்லாம் மூக்கை மூடிக்கொண்டுத்தான் விலக்க வேண்டும் போலிருக்கிறது.
உப குறிப்பு : இந்த நாவலுக்கு இயக்குநர் சங்கரின் அணிந்துரை வேறு.
"தான் சோர்வுறும் போதெல்லாம் இப்புத்தகம்தான் அவருடையததை(மன்னிக்க..) அவரை நிமிர்த்தியதாம்.."
கூடவே காந்தி கிருஷ்ணன், மாதேஸ் போன்றவர்களின் அடிவருடல் வேறு.
மிஸ்டர் பாலகுமார 'ஐய்யர்' அவர்களே...
சாதி வெறிபிடித்த பிராமிண தகப்பன், சொத்தையெல்லாம் விற்று மகளை தன் இனத்து வரன்கையில்
ஒப்படைத்து, வறுமையடைந்து, படித்த மகனை கோயிலுக்கு அனுப்பி "பட்டை சாதம்" மூன்றை வாங்கி வந்து உஞ்சவிருத்தி செய்கிறார்.
மனைவியையும், மகனையும் அடுத்த வேலை ஆகாரத்திற்கு கோவில் வாசலை பார்க்க வைத்தது லௌகீக தர்மமா?.
அது பிச்சையில்லை பிரசாதம்... பகவான் பிரசாதம் என்று வியாக்கியானம் வேறு.
இப்படியான தகப்பன், மகனுக்கும், மகனின் தோழிக்கும் வாழ்வோபதேசம் செய்கிறார். கிட்டத்தட்ட பத்து பக்கங்களுக்கு.
எப்படி எனக் கேட்டால்...
'அவர் வாழ்க்கை விலக்கி, உள்ளொளியை தேடுபவர். கண்ணின் கீழே ரப்பை போன்று வீங்கியுள்ளது. அது ஞானத்தின் அடையாளம் என்றெல்லாம் புலாங்கிதம் கொள்கிறீர்கள். என்னவோ போங்கள்.

சரி, அவருதுதான் புடிக்கல, ஒரே சாதி கப்பு அடிக்கதுங்கிறியே! அப்புறம் என்ன மசுத்துக்கு அவருத உடாம படிக்கிறே.?
செக்ஸ் மேட்டர டீட்டெய்லா எழுதுவாருப்பா.

.[நீல வண்ணத்தில் அச்சாகியுள்ள வாசகம் என் மன்சாட்சி என்பதை அறிவீராக.].


சாயாவனத்தப் படித்து முடித்ததும் நான் உண்ர்ந்தது இது சிறுகதையாக எழுதப்பட்டிருக்கலாமே... இவ்வளவு விஸ்திரமான விவரனைகள் தேவையில்லையே என்பதுதான்.
குறைவான நிகழ்வு முடிச்சுகள் கொண்ட புனைவு ஒன்றை நீட்டியிருப்பதின் சிரமம், தேவையற்ற உரையாடல்கள் - சூழலினை வர்ணனை திணிப்புகள் என்று அநாவசிய கட்டமைப்புக்குள் உட்படுத்துவது. இது வாசிப்புக்கு அயர்ச்சி தரக்கூடிய ஆபத்துகொண்டவை.
சொந்த மண்ணிலிருந்து... வயிற்றுப்பாட்டுக்கோ.. தொழில் மேம்பாட்டுக்கோ... இன்னொரு நாட்டுக்கு புலம் பெயர்வதும்... அங்கு நிலவும் வாழ்வியல் பழக்கப்பட்டு மிண்டும் இன்னொரு நாட்டுக்கு குடிபெயர்வதுமென வாழ்ந்த சிதம்பரம் என்கிற பாத்திரப்படைப்பு... இந்துவிலிருந்து, கிறிஸ்தவத்துக்கு மாறி மீண்டும் இந்துவாகவே அடையாளப்பட்டு...
எந்த மதத்திலும் முழுமையான தாக்கமோ (சடங்கு ரீதியாக) தர்க்கமோ இல்லாத ஒரு சமூக இயங்கியல் முரண்பாடு கொண்டவனாக இருக்கிறான். அவனுக்கு உவகையும், கிள்ளர்ச்சியும் அளிப்பது, உழைப்பு.
அவன் எந்த சூழலிலும் உழைப்பு... அதன் வளர்ச்சி எங்கிற மையத்திலேயே இயங்குகிறான்.
அவனது கனவான 'சர்க்கரை ஆலைக்கு' நிலத்தை வாங்கி, அங்கு அக்கிராம மக்களின் அழியாத பல நிகழ்வுக்கும், நினைவுக்கும் உரித்த சாட்சியாய் நிற்கும் மரங்களடர்ந்த வனத்தை அழிக்கிறான்.
அதன் பொருட்டு அவன் மேற்கொள்கிற சிரமங்கள்
அவனின் உடலுறவு தேவைகள்..
சக மனிதர்களுடனான உறவு மேம்பாடு..
சில இழப்புகள், பின் அவன் இலக்கு அடைவு என முடிகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் நம் வசிப்பிடமான பூமி, வெப்பமயமாதல் (GLOBAL WARMING) பிரச்சனையில் எப்படி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறதோ, அதே பிரச்சனையகி எளிதான மனிதர்களை பாத்திரமாக கொண்டு, மரங்களை, அக்கிராம மக்கள் உணர்வுகளின் குறியீடாக கொண்டு படைத்திருப்பது மேதமை.
என்றைக்கும், எல்லாக் காலகட்டத்திற்கும் பொருந்துவதான ஒரு படைப்பே முழுமையான படைப்பு.
அந்த வைகையில்  "சாயாவனம்" நாவல் ஓர் சாக வரம் கொண்டது.


வரம்பு மீறிய பிரதிகள் - கட்டுரை
சினிமாவாகட்டும், அரசியலாகட்டும், இலக்கியத்துறையாகட்டும் எனக்கான நிரந்தர ஆதர்ஸங்களே இருப்பதில்லை.
கமலஹாசன் தொடங்கி சுந்தர ராமசாமி வரைக்கும் இதே நிலைதான்.
ஏதே ஒரு புள்ளியில் உடைந்து சுக்கு நூறகி விடுகிறது.
2001 அல்லது 2002 சென்னையில் இருந்தபோது இயக்குநர் பாலாவின் உதவியாளரும் என் நண்பனுமான இளங்கோ முதன் முதலாக
சுந்தர ராமசாமியின் "ஜே.ஜே சில குறிப்புகள்" - நாவலை படிக்கத் தந்தார். புனைவும் கதையின் வடிவத்தில் அமைந்திருக்கும் என எதிர்பார்த்த எனக்கு முற்றிலும் வேறு தடத்தில் கையாளப்பட்ட உத்தி வெகுவாய் கவர்ந்தது.
இதுவரைக்கும் உணர்வுதொகுப்பு (சென்டிமெண்ட்) நாவல்களே வாசிப்பனுபவமாக இருந்த எனக்கு "ஜே.ஜே சில குறிப்புகள்" என்னை வேறோர் தளத்திற்கு இட்டுச் சென்றது. அது ஒர் சுகானுபவம். ஜே.கே (ஜே.கிருஷ்ணமூர்த்தி)வின் தத்துவ மரபினூடன தாக்கங்கள் நாவலில் பல இடத்தில் விரவியிருந்தது.
(இந்நாவலை படிக்கும் வரை சு.ரா வை. ஜே.கே வின் தத்துவ புத்தகங்களை மொழிப்பெயர்ப்பராகவும் கருத்தாய்வு என்ற மட்டில்தான் பரிச்சயம்)
அதற்கு பின் சு.ரா-வை தேடி தேடி வாசித்தேன். இன்றைய தேதியில் சுராவின் அனைத்து எழுத்தையும் வசித்து முடித்தாயிற்று.
தமிழ் இலக்கியப் பரப்பில் அப்பையொரு நிலைப்பாட்டில் இருந்த என்னை உடைத்து வெளியே வீசியவர் சாரு நிவேதிதா. [அவரின்  எக்ஸிஸ்டென்ஷியலிசத்தில் சிறிது நான் முரண்பட்டிருந்தாலும் அவரின் உலக சினிமா அறிவையும், மேற்கத்திய இலக்கியம் மட்டுமல்லாது, அனைத்துலக இலக்கியத்திலும் அவரின் தெரிபு என்னை வியக்க வைக்கிறது].
தனிப்பட்ட நடவடிக்கையின்மீது நிறைய விமர்சனங்கள் உண்டு. அதை நான் அப்படியே விலக்கித் தள்ளிவிடுகிறேன். ஒரு இன்டலக்சுவல் பெர்சன் - குழு மனப்பான்மையோடு இயங்கும் எழுத்து கூட்டங்களோடு வேறெப்படி நடந்து கொள்ளமுடியும்?.
இயக்குநர். ஜான் ஆப்ரகாம் (அக்ரஹாரத்துக் கழுதைகள்) அவர்களுக்கு பிறகு தன் கருத்தில் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத கம்பீர கலகக்காரன் சாரு நிவேதிதா தான்.
சாரு நிவேதிதாவின் இக்கட்டுரைத் தொகுதி வாசிப்பின் புதிய தரிசனத்தை தந்திருக்கிறது. பன்னாட்டு இலக்கிய வெளிச்சத்திற்கு புதிய கதவை திறந்துவிட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் முக்கிய கர்த்தாக்களாக கருதப்படும் புதுமைபித்தன், சுந்தர ராமசாமியின் படைப்புகளை நுண்ணுணார்ந்து விமர்சிக்கப்பட்டுள்ளது.
அவரின் உலக இலக்கிய ஆசிரியர்களின் பட்டியல் எனக்குள் பெரும் கவலையையும், பொறாமையையும் ஊட்டுகிறது.
தஸ்தாவ்யெஸ்கி, ரெஜிரஸ் ரொமேன்டோ, ஆஸ்கர் ஒயில்டு, அலெக்ஸாண்டர் கார்மோசூகி தவிர மற்றவர்கள் இதுவரை எனக்கு பரிச்சியப்படாதவர்கள்.
திராவிடம், தமிழ் என்று மிகச் சிறிய வட்டத்தை பிரமாண்டமாக்கி பிறமொழி அறிவிலிகளாக பின் தலைமுறைகளை உருவாக்கிய திராவிடச் செம்மல்களை வலியுடன் பார்க்கிறேன்.
எத்தனையோ மொழிகளில் வந்துள்ள அற்புத இலக்கியங்களை வாசிக்கமலே இறந்து விடுவோனோ? என கவலைக்கொள்கிறேன்.
இறுதியாக...
நம்மை பாதிக்கிற, பரவசப்படவைக்கிற இலக்கியமோ, வேறெதுவோ நம்முள் நிலையான ஸ்தபிதம் கொண்டுவிடும் என்பதில் துளியளவும் உண்மையில்லை. ஒரு மோன நிலையில் வாசிப்பத்தற்கும், சாகித்யத்தன்மையோடு வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வோரு விஷயத்திலும் அணுகுமுறை ஆழப்பட, ஆழப்பட வரித்துக்கொண்ட ஆதர்ஸங்களும், ஏற்றுக்கொண்டிருந்த நிலைபாடுகளும் தகர்ந்து போவது நிதர்ஸனம்.
இதை உணர்த்தியது சாருவின் "வரம்பு மீறிய பிரதிகள்" நூல்